ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

லூஸ் முதலாளி

தூரத்தில் ஈஸ்வரன் வரக்கண்டதும் சட்டைப் பையிலிருந்த பனத்தை எடுத்து அவசரஅவசரமாய் கணக்கு நோட்டுக்குள் ஒளித்து வைத்தேன்.

”யேண்ணே.. ஒரு பத்து ரூபாய்க்காக அப்ப பிடிச்சு கேட்டுக்கிருக்கேன். இல்லவே இல்லேண்டு சாதிக்கிறீக..” கடைவாசலின் வலதுபக்கக் கோடியில் காலைத் தொஙக விட்டு உட்கார்ந்திருந்த வேல்கண்ணன் சடைப்பு மிக்க குரலில் பேசினான்.

”ஆமாடா.. நானே ஒருவாரமா வீட்டுக்கு ஒரு நூறுரூவாக்காசு கொண்டு போகமுடியாமக் கெடக்கேன்இன்னிக்கி ஊர்லருந்து தங்கச்சி வேற வந்திருக்கு அது கையில எதாச்சும் குடுத்துவிடணும். அதுக்காவாச்சும் ஒரு ஏவாரம் வரணும்னு கும்பிடு போட்டுக்கிருக்கே.” .

ஆடிமாதம் பிறந்துவிட்டாலே. மற்ற தொழில்களுக்கு எப்படியோ சமையல் சார்ந்த தொழில்பாடுகள் அப்படியே உட்கார்ந்துதான் விடுகிறது. அதிலும் முதல் பதினெட்டுநாட்கள் கடும் வறட்சிதான். யார் கையிலும் அஞ்சு காசு புரளாது. பதினெட்டாம் பெருக்குக்கு மேலேதான் ஆவணிமாத வேலைக்கான அட்வான்ஸ் தொகை வந்து விழும். அதுவரையிலும் என்போன்ற வாடகைப் பாத்திரக் கடைக்காரர்களுக்கு பெரும் திண்டாட்டம்தான .சொந்தத் தேவைகளைவிட கடைக்கு வந்துபோகும் சமையல் புள்ளிகளுக்கான செலவு மற்றும் அவர்களது தேவையை சமாளிப்பதுதான் பெரும்பாடு.

” நாங்க வேற எங்க போவம்..ணே. ஒங்க கடைலதான் பாத்தரம் எடுக்கறம்.. இந்தமாதிரி வெட்டையான சமயத்தில ஆயிரம் ரெண்டாயிரம்னு குடுத்து சிக்கவச்சுக்கிட்டா ஒங்களுக்கு பார்ட்டிகள தக்கவச்சுக்களாம்ல.” ஒவ்வொரு நபரும் பணம் வாங்குவதற்காக இதற்குமேலும் பேசுவார்கள். இனிமேல் அடுத்தகடையில் பில்போடமாட்டோம் என கையில் அடித்து சத்தியம்கூட செய்வார்கள்.

நகரில் ஒவ்வொரு கடையும் ஆரம்பிக்கும் புதிதில் தூங்கிக் கொண்டிருக்கும் சமையல்காரரை எழுப்பி அட்வான்ஸ் கொடுத்த காலம் ஒன்று இருந்தது. புரோநோட்டில் கையெழுத்து வாங்கியும்கூட பத்திரப்படுத்தினார்கள்.

ஆனால், தர்ம நியாய சிந்தனையும், இயல்பில் பயந்த சுபாவமும் உள்ள ஒன்றிரண்டு பேர்கள்மட்டுமே ஒரேகடையில் வரவுசெலவு வைத்து வந்தனர்.

“அதெப்பிடி..? ஒங்களுக்கு எல்லா சமையல்காரங்களும் வேணுங்கற மாதரி எங்களுக்கும் எல்லா கடக்காரவுகளும் வேணும்..ல...!” என்று தனக்கு சாதகமான கோணத்தில் பொது நியாயத்தைச் சாய்த்துப் பேசும் சரவணன் போன்றவர்களையும் சமாளிக்க வேண்டும்..

“எல்லா கடக்காரர்களும் வேணும்ணா எங்கிட்ட எதுக்கு காசு கேக்குற.?” ”ஒங்ககிட்டயும் பாத்தரம் எடுக்குறம்ல...!”

“எங்கிட்ட காசு வாங்கீட்டு அப்பறம் அடுத்தகடைலயும் போய்ப் பாத்தரம் எடுக்கறியே..?”

”அவரும் காஸ் குடுத்துருக்கார்..ல.. “

“வரவு செலவுன்னா ஒரே ஆள்கிட்டதே வச்சுக்கணும். அதுதே சுத்தமா இருக்கும்..”

”அப்ப நீங்க கடைல ஒரு சமையல்கர்ரன மட்டுமா வச்சு இருக்கீங்க.. பத்துப்பேர் இருக்காகள்ல..! ஓனர்னா ஒங்களுக்கு ஒரு நாயமா..?”

“கடைங்கறது ஒரு ஸ்தபனம்..ப்பா.. பத்துப் பேர் வந்து போனாத்தே அதுகட.. ஒன்னமாதிரி உதிரி ஆள்களுக்கு பார்ட்டிகதான் ஸ்தாபனம்..”

“அந்த டகால்ட்டி வேலையெல்லாம் நம்பகிட்ட பேசாதீக.. நீங்க படிச்சவ்ர்னா.. நாங்க உலகத்துக்கே கஞ்சிகாச்சி ஊத்தறவெங்கெ.. “

இவனுக்கு எதைச் சொல்லியும் புரியவைக்க முடியாது என்று நாம் தெளிவாகும் போது புதிதாக பேச்சைத் துவங்குவான். “ அப்படீன்னா எனக்கு இப்ப ஒரு எழுவதுரூவா வேணும்.. தருவீங்களா..”

“எதுக்கு..?”

“கோட்...ரடிக்கணும்..”

”காலைல முப்பதுவாங்குனேல்ல..அது.. ?”

“ஆமாண்ணே.. இப்ப தூங்கணும்ல.. நீங்க தரமாட்டீங்க.. ஆனா இப்ப தெக்குகடைக்குப் போனா அவரு தருவாரு.. அப்ப ஒங்கள மாதரி அவருக்கும் நல்ல்பிள்ளை யாகணும்ல..”

நூறுஇருநூறு என வாங்குவதைக்கூட ஏதாவது ஒருகணக்கில் வைத்துக் கொள்ளலாம். கணக்குத்தான். வரவில்வர வாய்ப்பு மிகமிகக்குறைவு. ஆனால் இந்த முப்பது இருபது எந்தக் கணக்கிலும் சேரவே சேராது.எத்தனை இறுக்கமாய்க் கட்டிப் போட்டாலும் ருசிகண்ட காளைகள் அடுத்த படப்பை தேடித்தான் போகும்

அந்த வகையில் ஈஸ்வரன் பரவாயில்லைதான். லூட்டியாய் வந்து நிற்பான். சட்டைப்பையில் இருப்பதைப் பறிப்பதைப்போல தாட்டியமாய்க் கேட்பான். “எனக்கு வேணும்...ணே ”

“இல்லியேப்பா..”

“ணே.. நா வேற யார்ட்டயும் போய்க் கேக்க மாட்டேன்னு ஒங்களுக்கு தெரியும்ல... வேணும்....ணே..”

“வேணும்னா..? எங்கிட்ட இருந்தாத்தான..?”

“பக்கத்துக் கடைல வாங்கிக் குடுங்கண்ணே.. சாயங்காலம் தந்திடலாம்..”

“அந்தக் கழுதைய நீயே கேட்டு வாங்கிக்கிட வேண்டியதான..!”-

எத்தனை தரம் எவரிடம் வாங்கித் தந்தாலும் கொடுத்த பணம் எந்தச் சாயங்காலத்திலும் திரும்ப வந்து சேர்ந்தது கிடையாது அடுத்தொரு கோரிக்கையுடன் சாய்ங்காலம் வந்து நிற்பான். அதிலிருந்து தப்பும்வழி எதுவெனத் தேடுவதே அப்போதைய பாடாய் நிற்கும் நமக்கு..

“ணே.. நீங்க ஓனரு.. என்னாருந்தாலும் நா எச்சிஎல எடுக்குறவந்தான.. ண்ணே..”

இந்த வார்த்தைகள்தான் ஈஸ்வரன் போன்றோர்க்கு முக்கிய அஸ்திரம்.

“ஆமா.. எச்சிஇலை எடுக்கிற நிய்யி வேலைக்கிப் போனா அஞ்சாயிரத்த எண்ணிட்டு வர்ர.. அதே வேலைக்கி, ஓனரா கடைல குத்தவச்சிருக்கிற எனக்கு எம்பிட்டு வாடகையா வருதுப்பா.. அறநூறு..? எழநூறு..? அட ஆயிரம்னேகூட வையீ.. எச்சிஎல மெஜாரிட்டியா ஓனர் மெஜாரிட்டியா..?”

“அடடா.. என்னாண்ணே கணக்க இப்பிடிப் போடுறீக.அஞ்சாயிரமும் நானே வச்சுக்கிட்டா.. கூடவார பக்கி பதவல்களுக்கு ஆரு சம்பளம் தாரது..? ஆ..கா !.”

”ஆமா.. நிய்யும் சம்பளத்த கிளுக்கின்னுதே குடுத்துருவ..”

“ணேய்.. அப்பிடியெல்லா பேசாதீக.. நா கூலிக்காரென் சம்பளத்த மட்டும் என்னைக்கிம் நிப்பாட்டவே மாட்டேன். ஒங்க வாடகக் காசக்கூட ஆட்டயப் போட்ருவேன்... ஏன்னா.. நீங்க ஓனரு..”

“ஆமா.. ஓனருன்னா அவருக்கு வாயி, வகுரு கெடையாது.. புள்ளகுட்டி இல்லாத வெறும் ஆளு..” என்று முனியாண்டி ஒருநாள் எனக்கு சாதகமாகப் பேசிவிட்டான். “நம்மள மாதிரி நாலுபேரு வாடகக்காச நிப்பாட்டுனா அவ்ருக்கு கடவாடக கஞ்சிப்பாட்ட யார் பாப்பாங்க..” அவனும் ஒரு சமையலாள்தான். அதிகமாய்ப் பேசப்பிடிக்காது என அடிக்கொருதரம் சொல்லிக்கொள்வான்.

“ல்லேய்.. ஆட்டயப் போட்ருவேன்னுதான் சொன்னேன்.. போட்டேன்னு சொல்லல வாத்தயக் கேட்டுப் பேசணும். இன்னிவரைக்கும் எத்தன பில்லு பாக்கி வச்சிருக்கேன்னு அவரச் சொல்லச்சொல்லு. இப்ப இந்த்நிமிசத்தில கட்றேன்.. சம்பந்தமில்லாம் என்னிட்ட ஆஜராகாத.. தப்பாயிரும்..” ஈஸ்வரன் உடனடியாய் முனியாண்டியோடு சண்டைக்கு கிளம்பினான்.

“என்னா தப்பாயிரும்..? என்னா செஞ்சிருவ.. நா பொதுவாப் பேசுனா ஒனக்கெதுக்கு சுரீர்..ங்குது.. நானும் எங்காத்தாகிட்ட பால்குடிச்சு வளந்தவன் தான்., ஒருத்தனப் போல தப்பிலிப் பால் குடிச்சு வளரல..!” முனியாண்டியும் விசும்பிக்கொண்டு நின்றான்.

“அப்ப, நா தப்ப்லிப்பால் குடிச்சவனா..” ஈஸ்வரன் முறுக்கிக் கொண்டு நின்றான்.

முனியாண்டி எப்போதும் முடிகிற போதுதான் பேச்சைத் துவக்குவான். பெரும்பாலும் அவனது பேச்சு கடைக்காரர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதனாலேயே பெரும்பாலான சமையல்காரர்கள் முனியாண்டியோடு துவந்த யுத்த்திலேயே இருப்பார்கள் .

“நா பொதுவாத்தே பேசுவேண்ணே.. சமையல்காரங்களுக்கு என்னையுஞ் சேத்துத்தாஞ் சொல்றேன். போனஸ் குடுக்கறதெல்லாம் வேஸ்ட்டுண்ணே.. ஏன்னு கேளுங்க.. எடுக்குற பாத்தரத்துக்கு நூத்துக்கு இம்பிட்டுன்னு கமிசன் குடுத்திர்ரீங்கல்ல.. இதுக்குமேல நீங்க போடுறபில்லுல வீட்டுக்காரவுக கொஞ்சம் கொறப்பாங்க இல்லியா..! நீங்க போட்டமொதலுக்கு வட்டியக்கட்டி, சேதாரம் பாத்து.. காணாமப் போகுற பொருளத்தேடி, கடவாடக குடுத்து, ஒங்கசெலவு, சம்பளத்தப் பாத்து.. இம்பிட்டுக்கு மேல இவகளுக்கு நீங்க போனசும் குடுக்கணும்னா.. இவிங்க வேலயச் செஞ்சுபுட்டு வெறுங்கையவா வீசீட்டு வாரானுக..? இல்ல, கமிசன் வாங்காம இருக்கச் சொல்லுங்க போனஸ் தரலாம். அதாண்ணே நாயம்..?” என்று அனைவரையும் மயக்கும்விதமாய்ப் பேசுவான்..

சமையல் வாடகைப் பாத்திரத்தொழிலில் வியாபாரம் பார்ப்பது, லாபம் காண்பது இவை எல்லாவற்றையும் விட இம்மாதிரியான விவகாரங்களைச் ச்ந்திப்பதுதான் ஆகப் பெரியவேலை. ஒருவார்த்தையில், ஒருஎழுத்தில், உச்சரிப்பின் தொனியில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள். அதிலும் உற்சாக பானம் உள்ளே போய்விட்ட நிலையாய் இருக்குமேயானால் சந்தைக்கடையை விடக் கேவலமாகிவிடும். கட்டிட் உரிமையாள்ர் அதனைக் காண நேரிட்டால், உடனடியாகக் கடையை காலிசெய்யாமல் விடமாடார். அந்த அளவுக்கு உச்சகட்ட களேபரம் ஆகக் காணலாம். அதேபோல, அரைநொடியில் ச்மாதானமாகி இரண்டுபேரும் சேர்ந்து வேலைக்குப் போவதும் ஒரேகிளாசில் ரம் அடிப்பதும்கூட நடக்கும். இந்த இரண்டுக்கும் இடையில் நாம்தான் பொருளுக்கும் சேதாரமில்லாமல் நம் இமேஜுக்கும் பாதகமில்லாமல் நடந்து தப்பிக்க வேண்டும். திட்டினால் இருவரையும் ஒரேமாதியான வார்த்தையால் திட்டவேண்டும். அடித்தால்{?} அல்லது விலக்கி விடுவதாயிருந்தால் இரண்டு பேர்களையும் சமதூரத்தில் தள்ளி விலக்கிவிட வேண்டும். தவறும் பட்சத்தில் அவனுக்கு எந்தவிதத்தில் தான் குறைந்தவன் என்பதை இவன் திருப்தியுறுகிற விதமாய் நிரூபிக்கவேண்டும்.

அத்னால் அன்றைக்கு முனியாண்டியைத்தான் முதலில் கண்டிக்க வேண்டிவ்ந்தது. “முனி.. நிறுத்தப்பா.. அவெம்பாட்டுக்கு என்னத்தியோ பேசீட்டுப் போறான்.. அவென்ட்ட எதுக்கு வம்புகட்ற..?” அனேகமாய் இந்த வார்த்தைகள் இருவரையும் பாதிக்காது என நம்பினேன்.

“ணே.. நா இதுவரைக்கும் ஒங்ககிட்ட எத்தன பில் நிப்பாட்டி இருக்கே.” என்ற ஈஸ்வரன் தொடர்ந்து, ”போனமாசம் முல்லைநகர் பில் ஒண்ணு, அப்பறமா, சுக்கோடம்பட்டி பிலஒண்ணு.. ரெண்டும் வீட்டுக்காரத் தாயளிக பிரச்சன பண்ணுனதால நின்னது. அங்க ஏஞ்சம்பளமும் சேந்து நிக்கிது.. வேற எதுண்ணே வரணும்.. சொல்ணே...”

சொன்னாப்ல.. ஏதும் வரபோவுதா.. ? பொதுவாக இரண்டு நாளைக்குள் பில், வசூலாகாவிட்டால், அது காந்திகணக்குத்தான் வீட்டுக்காரரிடம் கேட்டால், வேலைக்கு வருவதற்கு முன்பே சம்பளத்தை வசூலித்து விட்டார்கள் என்றும், வேலைமுடிய பாத்திரவாடகை தந்துவிட்டதாகவும் ஒப்பிப்பர்கள். நெருக்கிப் பிடித்தால் யாரும் கடைப்பக்கம் எட்டிபார்க்க மாட்டார்கள்.

“சொல்ணே.. பாக்கி வச்சிருக்கனா..” மருளாளியைப் பிடித்து உலுப்புவதைப் போல உலுக்கினான். ஈஸ்வரன். ‘ஆமாம்’ எனச் எளிதாகச் சொல்லிவிட முடியாது. சொன்னால் ஈஸ்வரன மட்டும் பாக்கி நிறுத்தலாம் நாங்க நிறுத்துனா ஆகாதா..? என ஏனையோறும் ஆரம்பித்து விடுவார்கள்.

“அப்பிடி நாஞ் சொன்னனா..? எதோ சில்ர சில்ரயா அம்பது நூறுன்னு நிக்கிது. அத இல்லேங்கிறயா.. ?” அந்த வார்த்தையை மட்டும் வேகமாய்ச் சொன்னேன்

“அதுக்கு எனக்கு உரிம இருக்கு..” ஈஸ்வரன் என்னிலும் இன்னும் வேகமாய்ச் சொன்னான்..” ஏன்னா, ஒர்த்தனப்போல ஒருநாளைக்கு ஒருகடையத் தெடுறவெ நா இல்ல. .உம்மயா இல்லியாண்ணே, நான் சாகந்தண்டியும் எனக்கு இந்தக் கடதே.... எனக்கு நீங்கதே ஓனரு... நீங்க கம்சன் குடுத்தாலுஞ்சரி குடுக்காட்டியும சரி..”

அது என்னவோ ஈஸ்வரனைப் பொறுத்தவரை அவன் சொல்வது உண்மைதான். மண்டபத்து வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளுக் கும் அது ஐம்பது நூறு கிலோமீட்டர் தூரம் என்றாலும்கூட இங்கிருந்துதான் டெம்போ வைத்து பாத்திரபண்டங்களை அள்ளிக்கொண்டு போவான். அந்த ஒரு பாசமும் பச்சாதாபமும்தான் இருவரிடமும் நிரம்பி இருக்கிறது போலும். .

அதனால்தானோ என்னவோ ஒருநாள் போதைவயப்பட்ட நிலையினில் கடைக்கு வந்தவன், “ண்ணே.. நா ஒங்களப் பத்தி ஒருத்தங்கிட்ட ஒரு வார்த்த விட்டுப்பிட்டேன்.. தப்பா நெனச்சுக்கப் படாது.. சரியா..?” என்றான்.

என்னவார்த்தை என கேட்க விரும்பவில்லை. எதுவாயிருந்தாலும் பெரிய பதிப்பை உண்டாக்கப் போவதில்லை.” நீதான் தப்பா பேசமாட்டேல்ல..” என்று பூசி மெழுகினேன். என்னசொன்னாலும் அப்படித்தான் பேசவேண்டு மெனப் பழகிப் போயிருந்தது.

”இல்லண்ணே..” - விளக்கமளிக்கலானான். ” நா என்ன செஞ்சாலும் நீங்க என்னிய விட்டுத்தர மாட்டீங்க, அதேபோல நானும் ஒங்களவிட்டுப் போகமாட்டேன். ஏன்னா நா ஒரு லூசு.. , லூசுக்கு ஓனரு..? லூசுஓனரு..! நீங்க லூசுஓனரு...” இமைகள் படபடக்க என்முகம் நோக்கினான். ”தப்புன்னா என்னிய செருப்பக்கொண்டிக்கூட அடிங்க.”- செருப்பைக் கழட்டித் தந்தான்.

இதிலும் அவனோடு ஆத்திரப்பட்டு சண்டை போடவும் முடியாது. ஆமோதித்தலும் ஆகாது. வாடகைகக்டை என்பது உருண்டுகொண்டே இருக்க் வேண்டிய தொழில். கட்டிப்போட்டால் துருப்பிடித்துப் போகும். பத்துக்குப்பாதி வந்தாலும் ஓட்டம் நிற்கக்கூடாது. இந்த ஏற்பாட்டில் , ’யார் லூசு’ என்பதைத் துப்பறிவதில் அர்த்தமிருப்பதாகத் தெரியவில்லை.

”லே.. வேலு.. என்னா ஓனர கரெக்ட் பண்ணி ஒக்காந்திருக்க போல..” அட்டகாசமாய்ப் பேசியபடி கடைக்குள் நுழைந்தான் ஈஸ்வரன். வாசல்படி ஓரமாய் அரிவாள்மனைப் பையை வைத்தான்.

’’ ஒரு பத்துரூபாக் காசுக்காக இன்னிக்கி கொறப்பொழுதுக்கு தவங்கெடக்கெ. மனசு வக்கெ மாட்டேங்கிறாரு..” தனது வன்மத்தைக் கொட்டினான்.

”சமையல்காரவுகள ஆடிமாசப் பொழுதில கொஞ்சம் அனுசரிச்சு வச்சுக்கங்க....ண்ணேய்.. அடுத்த மாசமெல்லா நீங்க் தேடுனாலும் கெடைக்க மாட்டம்” என்ற ஈஸ்வரன், “ தீப்பட்டிகுடு ” என்று பீடியைப் பற்றவைத்துக் கொண்டான்.

“வேலைக்கா..?” வேல்கண்ணன்தான் கேட்டான்.

“ ஆமா, ஆண்டிபட்டில.. துளுக்கமார் வீட்டுவேல மண்டபத்தில கல்யாணம்.” என்றவன். ”நாங்கூட வீட்ல வச்சுக்கச் சொன்னே.. அம்ம கடைலருந்து பாத்தரம் பண்டமெல்லா அள்ளீட்டுப் போயிறலாம்லயா பில்லு எப்பிடியும் ஆயிர்ம் ரெண்டாயிரம் ஆகும். ஆடி வெட்டையில அம்ம ஓனருக்கு ஒருநாலுநாள் பொழுதுஓடும்ல ..” தொடர்ந்து, என்பக்கம் திரும்பினான்,“நெசமா எங்க்ம்மாத்தான..ண்ணே சத்தியமாக் கேட்டேன். “ நான் நம்புவது போல தலையாட்டினேன். “மாப்ளகாரெஞ் சரீன்னுட்டான்.. அவுக ஆளுகள்ல கலியாணச் செலவெல்லாம் பொண்ணு வீட்டுச்செலவாம்ல.. அதனால எம்பேச்சு எடுபடல..” சொல்லிமுடித்துவிட்டு, ”வேல்கண்ணா சும்மாருந்தா வேலக்கி வர்ரியா.” எனக் கூபிட்டான்.

ஏதோ யோசனையின்பின் “ம்ஹூம்” என மறுத்தான்.

“வேல இல்லேன்ன.. சம்பளம் அரப்பச்ச [ஐநூறு] வாங்கிக்க.. ஒருநேரத்துச் சாப்பாடுதே. என்னாண்ணே சொல்லுங்க..” அமைதியாய் இருந்த என்னை உசுப்பினான். நா சொன்னால் வேல்கண்ணன் கிளம்ப வாய்ப்புண்டு என நம்புகிறான்.

ஆனால் அப்படியெலாம் சொல்லி சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எத்தனையோ பார்த்தாயிற்று, ‘வேலையில்லாமல் இருக்கிறான் பாவம், என்றோ, வேலைக்கு ஆள் இல்லாமல் திண்டாடுகிறான் அய்யோ எனவோ., பச்சாதாபப்ப்ட்டு ஆளனுப்பி வைத்தால், கூலிப் பஞ்சாயத்தில் நம் தலைதான் உருளும். ’நீங்க சொன்னதுனால வேலைக்கிப் போனேன்.. சம்பளக்க் கணக்கு முடிக்கல பாருங்க.” என்று வீட்டில் வந்து. நிற்பார்கள்.. ‘’இவன் ரெண்டு தேங்காயத் திருவ நாலு நாளா நீட்டுறான் பொம்ப்ளயாள் சம்பளம்கூடத் தர மாட்டேன்..’ என புகார்வரும் வீட்டில் நிம்மதியாய் உறங்க முடியாது.

“ந்தா ஒக்காந்து இருக்கான்ல பேசிக் கூப்புட்டுப் போ..!” என்றேன்.

“எனக்கு ஆளெல்லா இருக்கு, அம்ம கடையாள் உம்முன்னு ஒக்காந்திருக்கானேன்னு கூப்பிட்டேன். வாரதுன்னா வாப்பா.. ஆட்டிவிட்டு வந்திரலாம்.”

“ஆவணிக்கு அட்வான்ஸ் வாங்கப் போகணும்... பஸ்சார்ஜ்க்கு ஒருபத்து ரூவா இருந்தா குடுத்துட்டுப்போ, ஈசு...” – வேல்கண்ணன் கெத்துவிடாமல் பேசினான்.

“ நானே.. அதுக்குத்தே எங்க ஓனரப் பாக்கவந்திருக்கே.. ஆண்டிபட்டிக்கி ஆள் கூப்பிட்டுப் போகணும். ஒரு நூறுரூபா குடுண்ணே.. நாள சாயங்காலம் வேலமுடிச்சதும் கொணாந்து தந்திர்ரேன்.” அலுங்காமல் வந்த விசயத்தை எடுத்து வைத்தான்.

“யே.. நானே ஒருவாரமா வீட்டுக்கு அஞ்சுரூவாயக்கூட குடுக்க முடீலன்னு இப்ப்த்தே இவன்ட்ட பொலம்பீட்டிருக்கே.. நீ வாட்டுக்கு..“ முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

”ஓனரு அப்பிடியெல்லாம் பேசக் கூடாது...ஒரு அம்பதாச்சும் குடுங்க.. ஒங்க கைல வாங்கீட்டு வேலைக்கிப் போனாத்தே ராசி..”

”ங்க பாரு ஈஸ்வரா. சத்தியமா எங்கிட்ட பைசா இல்ல. வேணும்னா சேப்பக்கூடப் பாத்துக்க..” சட்டையின் மேல்ப்பையை கவிழ்த்துக் காண்பித்தேன்.

”ணே... நேரமாச்சு..ண்ணே ஆளுக காத்துக் கெடப்பாக. சீக்கிரமா குடுங்கண்ணே...! “

”என்னமோ குடுத்துவச்ச காசக் கேக்குறமாதிரி கேக்குற.. ? கல்லாப் பெட்டியே காத்தாடிக் கெடக்கு பாரு “ மேசையின் ட்ராவை இழுத்துக் காண்பிப்பதுபோல இழுத்துக் காட்டிவிட்டு கணக்கு நோட்டை அதற்குள் வைத்து மூடினேன். எதேச்சையாய் நோட்டைப் புரட்ட, உள்ளே இருக்கும் எழுபது ரூபாய்க்கும் ஆபத்து வந்துவிடும்.

”ப்ச்.. வேணும்...ணே.. வெள்ளாடாதீக.. பக்கத்துக் கடையிலயாச்சும் சொல்லி வாங்கிகுடுங்க..”

“ ஈஸ்வரா.., லைட் போடற நேரம்.. அந்த் ஆட்டைக் கெல்லாம் நா...வரல..” கையெடுத்துக் கும்பிட்டேன்.

அந்தநேரம் மூன்றுபேர் கடைக்கு ஏறிவந்தனர்.

“வாங்க.” பார்த்த ஞாபகமாய் இருந்தது

“தலைவா.., ஆடி பதினெட்டுக்கு ட்ரம்மு இருக்கும்ல..?” ஒராள் கேட்டார்.

விருட்டென ஈஸ்வரன் எழுந்தான். “சமையலா..? ”

“அன்னதானம்.”

“ஆள் பேசியாச்சா..?”

“வெளியூர்லருந்து வாராக..”

“ம்...ட்ரம்மு மட்டும் வேணுமாக்கும்..? எத்தனி..? ”

“எட்டு.. பத்து இருந்தாக்கூட குடுங்க..”

“பாத்தரம்..? “ விடாமல் கேள்வியை எழுப்பியபடி நின்றான் ஈஸ்வரன்.

“அதல்லாஞ் சொல்லிட்டாகப்பா.. “ அடங்கு என்பதைப்போல ஈஸ்வரனை அதட்டினேன்.

“சொல்லியா..ச்..சா..” வார்த்தை வடிந்துபோனது ஈஸ்வரனுக்கு.” அப்ப ட்ரம்மயும் சேத்து குறிச்சுக்கங்க..” என்றான்.

“மொதநாள் வந்து எடுத்துக்கறம்..ணே...!” சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

திடீரென “அட்வான்ஸ் பண்ணீர்க்கீங்களா.?” என தடாலடியாய்க் கேட்டான் ஈஸ்வரன். ..

“ஓனரே பேசாம இருக்காரு.. “ கையில் மஞ்சள்காப்பு அணிந்தவர் இடக்காக சிரித்தபடி கேட்டார்.

அதே சிரிப்பை திருப்பிச் சிரித்த் ஈஸ்வரன், “ஓனரு எப்பிடிக் கேப்பாரு.. நல்லநாள் பொழுது.. முந்துறவங்களுக்கு சிட்டயப் போட்டு வாங்கப்போறாரு..”

மறுபேச்சுப் பேசாமல் முன்னூற்றி ஒருரூபாய் அட்வான்ஸ் தொகையாக வந்தது. இருநூற்றி ஒருரூபாயை எடுத்து கல்லாவில் வைத்துவிட்டு, நூறுரூபாயை தன்பாக்கெட்டில் போட்டுக்கொண்டான் ஈஸ்வரன். மறக்காமல் அரிவாள்மனைப் பையை கையில் பிடித்துக்கொண்டு ஆண்டிபட்டி வேலைக்குக் கிளம்பினான்.

வாசல்படியில் காத்துக் கிடந்த வேல்கண்ணனுக்கு காசுகொடுக்க கணக்கு நோட்டைத் திறந்தேன்.

=========================