ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

வெறும் ஆறு

மேற்படி விஷேசத்திற்கு வரும் அன்பர்கள், தங்கள் பத்து வருசத்து மொய்க் கணக்கு நோட்டை வாசித்து விட்டு வரவும்’

”எ ப் டீ... ?“ – காவி மேவிய தனது பல்வரிசை வெளித்தெரிய விகாரமாகச் சிரித்தபடி கேட்டார் கருப்பையா சாமிகள்.

”பலபேரு... பழைய சிட்டையப் பாக்காம மணிமணின்னு ஆட்டிக்கிட்டு வந்திர்வாங்கெ.. குடும்பங்குட்டியோட வந்து நல்லா ருசியா ஒக்காந்து சாப்புட்டுட்டு, என்னம்மோ புதுஸ்..சா மொய் செய்றமாதரி அம்பத்தொண்ணோ, நூத்தி ஒண்ணோ செஞ்சுபோட்டு கெம்பிரிக்கமா கெளம்பீர்வாங்கெ... நானெல்லா இதில ரெம்ப ஏமாந்திட்டேன்.. அதனால கல்யாணத்துக்குப் பெறகு தனிநோட்டுப் போட்டு யாராருக்கு என்னா செஞ்சம்னு தேதிவாரியா எழுதீல்ல வச்சிருக்கேன். எவனும் என்ட்டத் தப்பீ..ர முடியாது.” – ஹெ.. ஹெ.. என்று தனது பெருத்த உடலை ஆட்டி ஒரு சிரிப்பு சிரித்தார்.

சாமியார்மடம் என்று சொல்லக்கூடிய ஊரின் பொதுக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பல ஆண்டுக்காலம் காப்பிக்கடை வைத்து நடத்தி வருகிறார் சாமிகள். ஆனால் அதற்கு தரைவாடகை கூடத் தருவதில்லை என ஒருபுகாரும் உண்டு. தவிர வரம்புமீறி இடத்தை வளைத்துப் போட்டுக் கொண்டார் என்று சொல்வதும் உண்டு. அங்கே அவரது பங்காளிகள் பலபேரை அருகருகே குடிவைத்தும் உள்ளாராம்.

கடையேவாரம் தவிர, குறிசொல்வது, தாயத்துக் கட்டுவது, கைபார்த்து சாதகம் சொல்வது, மைபோட்டுப் பார்ப்பது, பேயோட்டுவது.. என ஏகப்பட்ட சித்து வேலைகள் செய்வார். அதன் காரணமாகவே அவருக்கு ஊரில் பலரும் பழக்கமாகி இருந்தனர்.

இவருக்கு சாமிகளுடனான் பழக்கமென்பது, பூபதியின் எலக்ட்ரானிக்ஸ் கடையில் - ஓய்வுநேரத்தில் உட்கார்ந்து - பொழுதை கழிக்கிற பொழுதில் சாமிகளும் அங்கேவருவார், பூபதிக்கு சாமிகள்தான் ஆஸ்தான ஜோஸ்யர். அவரைக் கலக்காமல் தும்மமாட்டார், இருமமாட்டார் அத்தனை பக்தி.

” இந்தாங்கசாமி காப்பி...” – இவரது மனைவி காப்பியைக் கொண்டுவந்து இவரிடம் நீட்ட, இவர் வாங்கி கருப்பையாசாமிகளுக்குக் கொடுத்தார்.

காப்பியை வாங்கிக்கொண்ட சாமிகள், “ அய்யாவுக்கு.. ? “ – என்று இவருக்கு காப்பி வராததைச் சுட்டிக் காட்டினார்.

” இவருக்கு இல்ல...” -கடுப்போடு சொன்ன இவரதுமனைவி தொடர்ந்து, “ இப்பாத்தே குடுச்சார்...” என்றார். உள்ளுக்குள் சாமிகளை சபித்துதீர்த்தார். உபசாரத்துக்காக ‘ காப்பி சாப்பிடுறீகளா சாமீ.. ந்னு ‘ இவர் கேட்டதும் இருக்கட்டும் என்றோ, இப்பத்தான் சாப்பிட்டேன் என்றோ பேச்சுக்குக் கூடச் சொல்லவில்லை. “ அப்பிடியா.. சரி, இன்னிக்கி தாக சாந்திய எங்கப்பே ஊத்துக்குளியா இந்த எடத்துலதே அமச்சிருக்கம் போல “ என துவங்கி, “நமக்கு சீனி கொஞ்சம் கூடுதலாப் போடணும். ஊர்ல அல்லாரும் சக்கர சீனின்னு பயப்படுவாங்க. நமக்கு கொறச்சா பிடிக்காது.. ஹெ.. ஹெ..” சொல்லிகொண்டே, இவர் வழக்கமாக உட்காரும் ஈஸிச்சேரில் அமர்க்களமாய்ச் சாய்ந்து கொண்டார். அதுவேறு இவரது மனைவிக்குப் பிடிக்கவில்லை.

”காப்பி நல்லாருக்கு தாயீ.. இதேபோலெத்தே எங்கவீட்டு விஷேசமும் நல்லாச் செய்யச்சொல்லிருக்க்ம்... வீட்லவந்து பத்திரிக்க வச்சிருக்கெ.. கட்டாயமா மறக்காம வந்துசேந்திடுங்க... காதுகுத்து தானன்னு நெனைக்க வேணாம். ஊருக்கெல்லாம் ஒருநாள் அன்னம் பறிமாற்ணும்னு நெனச்சுச் செய்யிறேன் அவசியமா வந்திரணும்..”. என்றவர், “ கும்பிட்டுக்க தாயி..” என கேட்டார். இவரது மனைவி ஒரு அதிர்வுடன் கையெடுத்துக் அவரைக் கும்பிட, “ தீர்க்காயிசா.. நல்லா இருக்கணும்..” இடுப்பிலிருந்த சுருக்குப் பையிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். “ பூசிக்க தாயீ.. கால பூசமுடுஞ்சதும் நேரா வர்றேன்.. அம்மாவ ஒருநாளைக்கி நம்ம ஆலயத்துக்குக் கூட்டிட்டு வாங்கய்யா.. எங்கப்பெ ஊத்துக்குளியாங்கிட்ட நல்வாக்கு வாங்கிட்டு வரட்டும்” கிளம்பினார்.

” என்னாங் மனுசெ.. மரியாதய கேட்டு வாங்குற ஒருஆள என்ஆயுள்ல இன்னிக்கித்தேம் பாக்குறேன்..” – ஆச்சர்யத்தில் சமைந்து போனவாராய் கணவருக்குப் பக்கத்தில் அப்படியே அமர்ந்து கொண்டார்.

” அப்ப, இதேமாதரியான விஷேச பத்திரிக்கைய பாத்திருக்கியாக்கும்..? “ கிண்டலாய்க் கேட்டார்.

” ஆத்தாடீ.. என்னா அசிங்கம் பிடிச்ச காரியம் . இபிடியெல்லமா பத்திரிக்க அச்சடிபாங்க..? ஆமா காதுகுத்து ஆருக்கு பேரனுக்கா..? “

” சொன்னா சிரிக்கக் கூடாது.. “ = பீடிகை போட்டார். “அவர் மகனுக்குத்தான். கடெசிப் பயல். அவனுக்கு வயசு.. சும்மா பதினாலுதான்..” சொல்லிவிட்டு இவர் அடக்கமாட்டாமல் சிரித்தார். மனைவி சிரிக்கவில்லை. ரெம்பவும் கூசிப்போய்ப் பேசினார்., “ அட கண்றாவியே, மொய் வசூலிக்கத்தே காரியம் வச்சிருக்காரா..? வெளங்கும் ..! “

” நமக்குத்தே அவர்ட்ட செய்மொற பாக்கி இல்லியே.. “ இவர் சிலாகித்துச் சொன்னாலும், எலக்ட்ரானிக்ஸ் கடை பூபதியின் அழைப்பிற்காக போய்வந்தார். வீட்டுக்குவந்து ஒரு பெரியமனுசன் கூப்பிட்டு போயிருக்கார். அதுக்காகவாச்சும்.. ஆனால் இவர் போய்வந்தது மனைவிக்குத் தெரியாது.

ன்று வழக்கம்போல பூபதியின் கடையில் உட்கார்ந்திருந்தார். அதுஒரு சேவைமையம். டி.வி., சி.டி.பிளேயர், ரெக்கார்டர், செல்போன் என நவீன யுகத்து பொருட்களின் பழுதுநீக்கித்தரும் கடை. அதனால் கடையில் எந்த நேரமும் ’சால்டரின்’ பொசுங்கிய மணம் மணத்துக்கொண்டே இருக்கும். “இந்த வாடயப் பிடிச்சுபிடிச்சு வீட்ல ஊதுவத்தி வாசனைகூட மணந்தெரிய மாட்டேங்குது பூபதீ.. “ வேடிக்கையாச் சொல்வார்.

” அப்பிடியா சார்.. ந்மக்கு சால்டரின் வாசனயத் தவர வேறெதுவும் தெரியாது சார்..” என அப்பாவியாய் பதில் சொல்வார்.

ஆனால் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு சரியாக எட்டுமணிக்கெல்லாம் வேலையை முடித்துவிட்டு, சாமிபடங்கள் அத்தனையும் சுத்தமய்த் துடைத்து, கதம்பம் வாங்கி மாலையாகத் தொங்கவிட்டு ஊதுபத்தி சாம்பிராணி, மணங்க்மழ தேங்காய்பழம் உடைத்து சில நாள்களில் படையல் போட்டு பூசைநடக்கும். பூசைமுடிய கடையிலிருக்கும் அத்தனைபேருக்கும் பந்திவிரித்து பிற்கே கடையை அடைப்பார் பூபதி. கடையில் நடக்கும் ஒவ்வொரு பூசைக்கும் கருப்பையா சாமிகள்தான் தேங்காய் உடைப்பார்.

யாருக்குக் ’காய்’ உடைத்தாலும் சாமிகள், காணிக்கைப் பணம் வாங்காமல் தேங்காயை கையில் எடுக்கமாட்டார். பூசைப் பொருள்களோடு, வெத்திலை பாக்கும், அதன்மீது காய்காணிக்கையும் இருந்தாக வேண்டும். “இந்த பணம் எனக்கில்ல, எங்கப்பெ ஊத்துக்குளி ஆண்டவனுக்காகும்.. இத அப்பிடியே முடிச்சுப் போட்டு வச்சிடுவே.. யார் அவெஞ் சன்னதிக்குப் போனாலும் உண்டியல்ல போட குடுத்துவிட்ருவேன்ல..” என்பார்.

தேங்காய் சீராக உடையவேண்டும் என்ப்தில் எல்லோருக்கும் விருப்பம் இருந்தது. காணிக்கை விஷயத்தில் காய் ஏறுக்குமாறாய் உடைந்து அதன்மூலம் குடும்பத்தில் சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்கிற அச்சமும் கூடுதலாய் இருந்தது..

பூபதி காணிக்கை விஷயத்தில் எப்போதும் குறை வைத்ததிலை. சாமிகளும் அவனிடம் கணக்கு வைப்பதில்லை.. அவசரத்தேவைக்கு அவ்வப்போது , “ சாமிக்கு ஒரு விண்ணப்பம்...” என்று கடைவாசலில் வந்து பவ்யமாய் நிற்பார். பூபதியும் உடனே எழுந்துவந்து ’முப்பதோ, ஐம்பதோ’ ப்வ்யமாய் அவரது கையில் திணித்து அனுப்புவார்.

அன்றைய பேச்சு சுவாரஸ்யத்தில் மாலை மறைந்து இராப்பொழுது வந்ததுகூடத் தெரியவில்லை இவருக்கு. பூபதியின் வீட்டிலிருந்து படையலுக்கான ‘அவல் அமுது’ தூக்குவாளியில் வந்து சேர்ந்ததும்தான் இன்று வெள்ளிக்கிழமை என இவருக்குத் தெரியவந்தது. உடனே சடாரென எழுந்தார். எட்டுமணிக்கு சாமிகள் வருவார். பூசைமுடிய ஒன்பதுமணி, பிரசாதம் சாப்பிட்டு முடிக்க பத்துமணிகூட ஆகிவிடலாம்

” இதென்னா.. கேரிபேக்ல பார்சல்..? கடல பொரியா..?“ – தூக்குவாளி யோடு சேர்ந்துவந்த பார்சலைத் தூக்கிப் பார்த்தார்.

” அது சாமிக்கு. வீட்டுப்பார்சல் “ – கடைப்பையன் பதில் சொன்னான். பூசைமுடிந்ததும் அரைமுடித்தேங்காய் பழத்தோடு பிரசாதப் பொட்டலம் தனியாய் எடுத்துச் செல்வார்.

” என்னாசார் கெளம்பிட்டீங்க..? இதயெல்லாம் யார் சாப்பிட்டுத் தீக்கறது..? “ கையைப் பிடித்து உட்காரவைத்தான்.

சரியாக எட்டுபத்துக்கு சாமிகள் கடைக்கு வந்தார்.கூடவே ஒருபிரச்சனை யை இழுத்துவந்தார். பிரச்சனைக்கான நபர் கருப்பையா சாமிகளின் ஆகிருதியில் பாதியளவுகூட இருக்கவில்லை. மெல்லிசான உடல்வாகும், மெருன் கலரில் சட்டையும், அதற்குப் பொருத்தமான ஒரு பேண்ட்டும் அணிந்து திருத்தமாய் இருந்தான்.

சாமிகள் வந்துவிட்டதால் பூபதி பூசைக்கான ஆயத்ததில் உதவியாளோடு இறங்கலானார்.

சாமிகளைப் பார்த்ததும் இவர் வணக்கம் தெரிவித்தார். சாமிகள் அந்த பதட்டமான சூழலிலும் இவருக்கு கையெடுத்துக் கும்பிட்டு பதில் வண்க்கம் செய்வித்தார். உடன் அழைத்து வந்தநபரை காலியாக இருந்த சேரில் உட்காரச் சொன்னார்..

” மன்னிச்சுக்கங்க சாமி.. அன்னைக்கி நான் வெளியூர் போய்ட்டேன். அதான் வரமுடில... சாமி..! “

” அன்னைக்கிப் போய்ட்ட.. சரீ..., மக்யா நாத்து.. நேத்து.. இன்னிக்கீ.. விஷேசம்முடிஞ்சி ஏழு நாள் ஆச்சுல்ல ஒருநாக்கூட ரெஸ்ட்டே இல்லியா ’’ – சாமிகள்கேட்டவிதம் பசித்த ஐந்தறிவு ஜீவனின் உருமலாய்க் கேட்டது. அவரது வீட்டுகாதணி விஷேசத்துக்கு வராதநபர் போலிருக்கிறது. மனக்கண்ணில் அவரது அழைப்பிதழில் அடிக்கோடிட்டிருந்த வாசகம் மின்னி மறைந்தது இவருக்கு.

” இல்ல சாமி.. விசேசம் முடிஞ்சி போயிருச்சு.. வெறும் வீட்டுக்கு எப்பிடி வர்ரதுன்னு சின்ன சங்கடம்..” வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் பேசினான்.

” விசேசந்தானப்ப முடிஞ்சது .? வீட்ல ஆள் இல்லாமயா போயிருவாங்க். ஒன்னய யென்னா விருந்தாடியாவா வரச்சொன்னாங்க..? வந்து உள்ளதக் குடுத்துட்டுப் போகவேண்டியதான..” – சாமிகளின் பேச்சு இவருக்கு குமட்ட லெடுத்தது.

” சரிங்சாமீ அடுத்தொரு விசேசம் வரும்லன்னு அசால்ல்ட்டா இருந்திட்டே..” எத்தர்த்தமாய்ப் பேசினான்.

” ஆமாமா..நீ வந்து செய்வேங்கறதுக்காக இன்னோர்க்கா தனிய்யா ஒரு பந்தி வக்கெணுங்கிறயாக்கும்..? இதுக்குத் தானப்பா பத்திரிக்கையிலயே படிச்சுப் படிச்சுப் போட்ருந்தம் ’சிட்டய பாத்துட்டு வாங்கப்பான்னு..’. அறிவுவேணாம்..! “

ஏதும் பேசமுடியாது அமைதியாய் இருந்தான்.

சாமிகள் திடீரென இவரிடம் ஒப்பிக்கலானார்., “ஒரு பத்துவர்சத்துக்கு முந்தி இவரு கல்யாணம்...யா.. நாந்தே நடத்திவச்சே.. எந்தஊரூ.. பாளயமா., சின்னமனூரா.. இங்கருந்து காரேறிப் போயி, மொய் செஞ்சிட்டு வர்ரே.. நீ.. இங்கன உள்ளூருக்கு வரமுடீலன்னா, அம்புட்டுப் பெரிய்யாளா.. யே எத்தாம் பெரிய இவனாக்கூட இரு.. அனைக்கி செஞ்ச கடன கட்டு.. என்னாங்ய்யா..? “

இப்படியெல்லாம் ஒரு பஞ்சாயத்து வரும் என இவர், நினைத்துக்கூட பார்த்ததில்லை. பேண்ட் போட்ட நபரோ தலையைக் கவிழ்த்துப் போட்டு உட்கார்ந்திருந்தார்.

” இத்தனதூரத்துக்கு எதுக்கு அவரப் பேச வக்கிறீங்க..அவர் கடன் எவ்வளவு..? ‘ _ மொய் என சொல்ல இவருக்கு வார்த்தை வரவில்லை.

மெல்ல தலையை நிமிர்த்திய அந்தநபர், ” வெறும் ஆறு ரூபா தான்சார்” என்றார்.

இவருக்குமட்டுமல்லது பூபதிக்கும், க்டையிலிருந்த நபர்களுக்கும் தூக்கிவாரிப்போட்டது.

“ ஆறா நூறா.. ? “ இவர்தான் திருப்பிக் கேட்டார்.

“ என்னா வெறும் ஆறுரூவா..? பத்துப் பன்னண்டு வருசத்துக்கு முந்தி அஞ்சாயிரமா செய்வாங்க.. . அன்னிக்கி வெலவாசி எவ்வளவு..? அரிசி எவ்வளவு..? இன்னிக்கி பவுனு வெல என்னா..? அன்னிக்கி பஸ் சார்ஜ் எம்புட்டு.. அதெல்லா விடு.! ஒரு செங்ககல்லு அம்பதுகாசு.. இப்ப, பத்துரூவா.! நாசமாப் போன்னு ஆரையும் மண்ணவாரித் தூத்தமுடியுமா..? வண்டிமண்ணு ஆயிரம் ரூவா.. அப்பிடியே கணக்குப் போடு. ஓங் கல்யாணத்துக்காக காரேறி வேற வந்திருக்கம் அதயுஞ் சேத்துக்க..”

அந்த நபர் பணத்தை எடுக்க தன் சட்டைப்பைக்குள் கை நுழைத்த பிறகும் சாமிகள் பேச்சை நிறுத்தவில்லை.

“ கூப்புட்ட மரியாதைக்கி எத்தன பேரு வந்தாக தெரியுமா பயந்துகிட்டா வந்தாங்க..? ந்தா., அய்யாவெல்லாந்தே வந்தாரு.. நல்லா திருப்தியா சாப்புட்டாரு.. எனக்கு எம்பிட்டு சந்தோசமா இருதுச்சு தெரியுமா.. என்னாங்கய்யா....! “

நல்லவேளையாய் சாப்பிட்ட சாப்பாட்டிற்கு நூறுரூபாய் மொய் எழுதிவிட்டு வந்ததை நினைத்து தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொண்டார் இவர்.

-------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக