சனி, 6 ஆகஸ்ட், 2011

சொல்லில் விளங்காத மாதிரிகள்

ம. காமுத்துரை

அவர் வெளியில் வந்து பார்த்தபோது,, லதாவின் வலது காதோரம் புடைத்து வீங்கியிருந்தது, முகத்தில் ஆங்காங்கே சிராய்ப்புகள்.

”என்னாண்ணே இது..!, இம்புட்டு அநியாய்ம் பண்றான்.. ரோட்ல போனவளப் பிடிச்சு இழுத்து சாக்கடையில தள்ளீவிட்டுப் போறாண்ணே...!”

அப்போதுதான் வெளிவேலைகள் முடிந்து, காலைச் சாப்பாட்டுக்காக வீடு நுழைந்திருந்தார். ரெம்ப நாளைக்கிப் பிறகு வீட்டில் இடியாப்பம் செய்து தேங்காய்ப்பால் ஆட்டி வைத்திருந்தார்கள்.. பனங்கருப்பட்டி போட்டு ஊறவைத் துச் சாப்பிட ஆவல் மிகுந்திருந்தது. சட்டைதுணி மாற்றி முகமலம்பி உட்கார்ந்த சமயம் லதாவின் கூப்பாடு, சமையல்க்கார சிவனுவின் சம்சாரம்.

வெளியே வரத்தாமதமானால் லதா உள்ளே வரத் தயங்காத பெண். உள்ளே வந்தாலோ சாமானியத்தில் கிளம்பிடாத சுபாவம். அது, இவரது மனைவிக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ‘ஒங்க நாட்டம.. பஞ்சாயத்து ஏவாரமெல்லாம் வீட்டுக்கு வெளியிலதான் வச்சிக்கணும்..’ – இதைப் பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறார். மனைவியைப் பொருத்தவரைக்கும் இந்தமாதிரி வேலையெல்லம் வேலையத்தவர்களின் வேலை. அந்தச் சிந்தனையில் அவள் பஞ்சாயத்துக் கேட்டு வருபவர்களிடம் ஏடாகூடமாய்ப் பேசிவிடக்கூடாதே என்ற பயம் எப்போதும் இருக்கும். அதிலும் லதா – சிவனு தம்பதிகளீன் மோசமான அபிப்ராயம் கொண்டவள். ‘இவளுக்கு அவெ, ரெண்டாவது புருஷனாம்... இவ அவனுக்கு நாலாந்தாரமாம்... இதுல சடப்பு... சண்ட வேற.. அதுக்கு ஒரு பஞ்சாயத்து.. தூ...த்திரி.. நாறக்கழுதைக..’ – என்று கடித்துத் துப்புவார்.

மனைவியைப் போல அவரால் யாரையும் எளிதாகத் தூக்கி எறிந்து பேசமுடியாது. அது சரியானதும் அல்ல. தன்னிடம் வருகிற தகராறுகளை எந்த நாளிலும் முகம்பார்த்துக் கேட்டதில்லை. செவியும் சிந்தையும் மட்டுமே திறந்துவைத்துக் கேட்ப்பார். அதனாலேயே சாதிவேறுபாடு இல்லாமல் அனேகர் வந்து பைசல் கேட்பார்கள்.

“ நீ என்னாம்மா செஞ்செ.. ? “ – லதாவைக் கேட்டார்.

“ நா.. எதுமே செய்யலே... ண்ணே.. ! பேசக்கூட இல்ல.. சுசூவான்னு காப்பி வாங்கீட்டுப் போய்ட்டிருந்தே..ணே தூக்குவாளியப் பிடிங்கி வீசி எறிஞ்சி என்னிய, சாக்கடைக்குள்ள தள்ளிவிட்டுட்டா..ணே சொவத்துல மோதி ம்ண்ட ஒடஞ்சுபோச்சு.. ! “ – காயத்தைத் தொட்டுக் காண்பித்தாள்.

அவருக்குச் சின்னுவின் மேல் அளவற்ற கோபம் பொங்கியது. ஏதாவது பேசி சமாதானம் செய்துவிடலாம் என நினைத்திருந்தார். ஆனால், அவனது செயல்கள், அவன்மீதான குற்றத்தை அதிகப்படுத்திக் கொண்டே போகிறதே..

“ ஒங்ககிட்ட ஒப்பிச்சது குத்தமாம்..ணே..! “

“ ஓ.. அசிங்கம் பாக்குறாரா... ? “

“ ஆ..மா..!... பீ க்குழில கெடக்குற நாய்க்கி நாத்தம் மணக்கப் போகுது....? “

“ மணக்கப் போய்த்தான தள்ளி விட்டிருக்கான்..! “

“திமுர்..ணே.. , மப்பு. எதோ நாமளும் வந்து மனசொத்து நாலுவர்சம் குடும்பம் நடத்திட்டமேன்ன் காரணத்துக்காகத்தெ, பல்லக் கடிச்சிகிட்டுப் போறேன்..ணே. இதுமட்டும் எம்மகனுக்குத் தெரிஞ்சிச்சின்னு வையிங்க.. நாலாமூனா வகுந்து போடுவான்..” – ஆள்க்காட்டி விரலை சொடுக்கிக் கொண்டு பேசினாள்.

அவரது மனைவி சொன்னதுபோல லதாவுக்கு சிவனு இரண்டாவது புருஷன்தான். மூத்தானுக்கு பெரிய்ய்ய பையன் இருக்கிறான். வயசு பத்தொன்பதைத் தாண்டியாம். அவன் தன் தம்பிகளோடு பாட்டி வீட்டில் இருக்கிறானாம். ஏதோ ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ம்ருந்து கட்டுபவனாக வேலை. அங்கே ஒரு பெண்ணை ‘லவ்விக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

அவ்வளவு பெரிய பையன் லதாவுக்கு இருப்பதாகத் தெரிய வந்த ஒருநாளில் “ஒனக்கு இப்ப என்னா வயசுமா.. !” எனக் கேட்டார். சின்ன முகம், கட்டுமீறாத உடம்பு, வாடாத பளபளப்பு.. நம்பமுடியவில்லை.

“ முப்பது முப்பத்திரண்டாகும்...ணே.. சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்டு பதிமூனுவயசிலியே தா.. மாமனுக்கு கட்டிவச்சிப்புட்டாக.. அந்த தறுதலப் பயலுக்கு அஞ்சுவருசம் ஆக்கிக் கொட்டுனே.. ரெண்டு புள்ளைகளக் குடுத்துப் புட்டு தேவ்டியாத்தனம் பண்ண ஆரம்பிச்சான். ! “

“ ஆம்பள எப்பிடிம்மா தேவ்டியாத்தனம் பண்ணுவான்....? “ – அவர் புரியாமல் கேட்டார். பேசுவது தமிழில் தானென்றாலும், வார்த்தைகளின் வீச்சிலும் உச்சரிப்பின் தொனியிலும் ஆயிரம் வேறுபாடுகள் காண்பித்தன.

“அதென்னா..ண்ணே பொம்பள புருசனத்தாண்டிப் போனான்னா அவள தேவ்டி யான்னு பொசுக்குனு பேசிடுவிக , ஆம்பளப் பயதான்ணே அளவில்லாத அக்குறுமம் பண்றான்.. அது ஆர் கண்ணுக்கும் தப்பாவே தெரியாது.. ஏன்னா நூத்துல முக்காவாசிப் பேரு அதத்தான பண்றாங்க..” – என்றவள் “ நாம் பொதுவாச் சொன்னேண்ணே நீங்க தப்பா எடுத்துக்காதீங்க..” என திருத்திச் சொன்னாள்.

”அவனுக்குப் பெறகு இவெங்கூடச் சேந்தியாக்கும்..” – கதைகேட்கும் பாணியில் அவருக்கு அன்றைய பொழுது சுவாரஸ்யமாய் அமைந்தது.

“ இவெங்கூட நா எங்க சேந்தே... ? அந்தாள வெட்டி விட்டு விடுதலப் பத்தரம் எழுதி வாங்குன பெறகு, கந்தசாமி கல்யாண மண்டபத்தில தூத்திப் பெருக்கிக் கிட்டிருந்தெ.. ‘அய்யா’ சமயல் வேலைக்கி வந்தவரு. சித்தாள் பத்தலைனா ஆள்க் கேப்பாரு , நானும் நம்ம தெருவில ஆளமச்சுக் குடுப்பேன். அப்பிடியே வெளியூரு வேலைக்கும் போனம். எங்குட்டோ மனசு ஆயிருச்சு.. இந்தாளும் ரெண்டு மூனக் கட்டி சாமியாராத் திரிஞ்சாப்லியா... “ – வார்த்தைகள் தயக்கம் காட்டின.

”கனெக்சன் ஆயிருச்சாக்கும்..” – கதையோட்டத்தில் அவ்ருக்கு வார்த்தைகள் தானாய் வந்து விழுந்து விட்டது. நாக்கைக் கடித்துக்கொண்டார். ரெம்ப எறங்கிட்டமோ...

லதா அதனை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ”அப்பிடியெல்லாமில்ல, கரெக்ட்டாப் பேசிச் செஞ்சுதே வீட்டப்புடுச்சம்.. என்னோட சொந்தமோ, அந்தாளோட பழைய ஒறவுகளோ வந்து ஒட்டக்குடாது. எல்லாமே புதுசா இருக்கணும்தே சேந்தம்..“

“ புதுசா இருந்துச்சா.. ? “

“எங்க..ண்ணே..? எதுப்பேசுனாலும் பழசத்தான் கிண்டுறான்.. அதும் ராவாச்சுனா..” என்றவள், “வேணா..ண்ணே.. “ என்றபடி திடீரென ஆவேசம் கொண்டாள். “ நா எளிய சாதிதான்..ணே ஆனா.. இன்னிக்கும் மனசாச்சிக்கி தப்பா நடந்ததில்ல.. கஞ்சி இல்ல, தண்ணியில்லனாலும் அடிவவுத்தில ஈரத்துணிய சுத்தீட்டு அனலாத்தான்..ணே இருந்திருக்கேன்.. ஆனா இந்த தப்பிலிப் பய.. என்னிய, என்னென்னா வார்த்தயெல்லாங் கேக்குறாங்..கிறீக..”

உணர்ச்சி மேலிட அவ்வப்போது அழுதிடுவாள். இப்போதும்..

“ சரிம்மா அவ்னும் வரட்டும். கேட்டுக்கறேன்..”

“ணே.. நா நெனச்சது ஒன்னு. வேரில்லாம நிக்கெக்கூடாது. மழைக்கும் காத்துக்கும் ந்ம்மள மந்தைல கொண்டுக்குப் போய்த் தள்ளீரும்னு பயந்து வந்தேன்.. ஆனா இது சுடுகாட்லயும் கேடா ஆச்சு.. வீட்ட வந்து ஒருபார்வ பாருங்க..ணே, பாத்தர பண்டங்களப் பூராவும் அடிச்சு நெளிச்சுப் புட்டான். பீரோவத் தள்ளி, சாச்சிஒடச்சிப்பிட்டான். அதுகூடப் போகட்டும். உடுத்தற துணி என்னான்ணே செஞ்சிச்சி.. ? அதப் பூராவும் அள்ளி தீ வச்சுப் பொசுக்கிப் போட்டான்ணே.. கட்டீருக்க துணிய தவுத்து மாத்து உடுப்பு இல்லாம நிக்கிறேன்..ணே.. நா என்னா குத்தஞ் செஞ்சே.. ? தெனத்துக்கும் இந்தப்பாடா..?” முகத்தை ஒருகையால் மூடிக் கொண்டு அழுதாள்.

கேட்கவே கஷ்டமாய் இருந்தது. இது அவ்ர்களுக்குள் புதிதல்ல என்றாலும், எப்படி பொறுமை காக்கிறாள், என்பதுதான் அவருக்கு விளங்கவில்லை.

“ஒதறீட்டுப் போகறது பெருசில்ல..ணே, ஒழச்சு தனியா சீவிக்க முடியாம இல்ல.. ஆனா, ஊரப்போல நாட்டப்போல ஒர்த்தெங்கூடவே இருந்து செத்தம்ன ஒரு பேச்சுக்குத்தே..ணே... “ என்று பலவிதமான கற்பிதங்களெல்லாம் பேசுவாள்.

அதற்காகவோ என்னவோ வேலைக்குப் போகும்போது இரண்டுபேரும் சேர்ந்துதான் போவார்கள். துவைத்துத் தேய்த்த உடுப்புகளும், எண்ணெய்பூசி தலைபின்னி சந்தனமும் குன்குமமும் திலகமிட்டு, பூவும் புனனகையுமாய் நடந்தார்களானால் அத்தனை சௌந்தர்யமாய் இருக்கும். பொறுப்போடு வேலை ஆட்க்களைத் திரட்டுவதும், துவக்க வேலைகளைப் ப்கிர்ந்து கொள்ளூவதுமாய் பரபரவென இயங்குவார்கள்.

“ யேம்மா.. யே.. லதா.. இந்த ரெண்டு பேரயும் கூட்டிக்கிட்டு மண்டபத்துக்குப் போறியா..? போனதும், சரக்கப் பிரிச்சு எடுத்துவையி.. அதுங்குள்ல நா வந்திர்ரெ...! “ – என்பான்.

“ இட்டிலிக்கி ஊறப்போட அரிசி அளந்து குடுத்திட்டியா..? “ – லாதா கேட்பாள்.

“ காலம்பறயே அளந்துபோட்டு அரவக் கடைல குடுத்தாச்சு.. நா புரோட்டா மாஸ்டர இழுத்துட்டு வந்திர்ரே.. லேட்டாச்சுன்னா அடுப்பப்பத்தவச்சு பருப்ப வேகப் போட்ரு..! காணிக்கக் காசு வாங்கீரு..மறந்திறாத..”

வேலை ஆரம்பித்ததும் போட்டிபோட்டுக் கொண்டு வேலைசெய்வார்கள். அப்பத்தான் வேலையாட்கள் உறுத்தாய் வேலைசெய்வார்களாம். அதிலும் சிவனு.. பேச்சு பேச்சு எனறு பேசிக்கொண்டேதான் இருப்பான். ஊம் கொட்டி மாளாது.வேலைகொடுத்தவரிடத்தில் ஏதாவது ஒரு சொந்தம் கண்டு, அண்ணே: மாமா, சித்தப்பா, சித்தி என,முறை கொண்டாடினானால் கருவிலிருக்கும் சிசு கூட கைப்பிடியில் வ்ந்து கிடக்கும். லதா எதுவும் பேசமாட்டாள். அவள் கண் பூராவும் சிவனுமேல்தானிருக்கும். யாரிடம் பேசுகிறான். எந்த சித்தாளிடம் வழிகிறான் ; வீட்டுக்காரரிடம் எத்தனை பணம் வாங்குகிறான் ; யாரை ‘கடைக்கு’ அனுப்புகிறான் என்று சக்லத்தையும் கிரகித்துவிடுவாள். அத்தோடு அவன் தடுமாறுகிற இடத்தில், தானே நின்று சமயலை முடிக்கவும் செய்வாள்.

வேலைமுடித்து வீட்டுக்குக் கிளம்பும்போது, காணீக்கை அரிசியும், தேங்காய் பழமும் பைபோட்டு வாங்கிவிடுவாள்.சம்பளப் பணத்துக்கு மட்டும் அவளைத் தவிர்ப்பான்.

“பைய்க் கொண்டு வீட்டுக்குப்போ.. சம்பளத்த வாங்கியாரே... “ – பவ்யமாய் பேசி அவளை அனுப்பிவைப்பான்.

“ நாள்ப்பூராம் நின்னு வேலபாக்குற புள்ள.. கொஞ்சநேரம் தாக்காட்டி நின்னு சம்பளத்த வாங்கிட்டு வரமுடியாதாம்மா... “ – பலமுறை அவரே லதாவிடம் சொல்லி இருக்கிறார்.

“ எப்பிடீ ண்ணே..? எத்தன நாள்தே பூண் பிடிக்கிறது..?”

அவனைப் பற்றி அறிந்த சிலபேரே சம்பளத்தை அவளிடம் தருவார்கள். இல்லையெனில் அவள் நகர, சிவனு சம்பளத்தை வாங்கிவிடுவான். உடன் வேலைபார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, டிப்ஸ் தருவதற்காக ‘கடைக்கு’ அழைத்துப் போனானால் பாக்கட் காலியாகும்வரை திரும்பமுடியாது. நூறோ இருநூறோ தப்பிப்போய் சேப்பில் கிடப்பதுண்டு.

“டெய்லி சம்பாத்தியம்னா இதுகூடப் போதும்...ணே, முகூர்த்த நாள் வந்தாத்தே வேல... அதுவரைக்கும் வீட்டுவாடக, துணிமணி சேவிக்க, கந்துப்பாடு கடன்பாடு பாக்கவாச்சும் வேணாமா..ணே கூட வேலைக்கிப் போற ஏஞ்சம்பளத்தக் கூடத் தரமாட்டேங்கிறானே...!’

ஒருமுறை வேலைத்தள்த்திலேயே சம்பளம் வாங்காமல் போகமாட்டேனென வீம்பு செய்து உட்கார்ந்து விட்டாளாம்.; சிவனு ஏதேதோ சொல்லிப் பார்த்தும் லதா நகரவில்லையாம் ; அவனுக்குக் கோபம் வந்துவிட்டது, கையிலிருந்த அருவா மனையால் அவளது கூந்தலை அறுத்துவிட்டானாம்.விசேச வீட்டாள் களுக்கு ஈரக்குலை பதறிவிட்டது. போதையில் குறிதவறி கழுத்து அறுபட்டி ருந்தால்.. வீடு மொத்தமும் ஜெயில் களி திங்க நேர்ந்திருக்குமே...!

அன்றைக்குத்தான் லதாவின் மகன் வந்து, சிவனுவை கும்முகும்மு என கும்மி வீட்டுக்குள் போட்டுப் பூட்டிவைத்து இருக்கிறான். மறுநாள் சமாதானம் பேசி கதவைத் திறக்கப் போன அவரிடம், ‘ தப்பு செஞ்சிட்டே....ண்ணே, ‘ என அழுது மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

”எல்லாம் ஜாலம்...ணே, நடிப்பு.. கெஞ்சுனா மிஞ்சறது.. மிஞ்சுனா கெஞ்சறது..” என்ற லதா, அப்பவும் “விட்டுத் தொலைங்க ..ணெ..” என்றாள்.

வீட்டுக்குள் இடியாப்பம் இன்னேரம் ஆறிபோயிருக்கும். மனைவி தானும் சாப்பிட்டிருக்கமாடாள்.

“சரிம்மா... நாளைக்கி பேசிட்டுக் கூப்பிடுறேன்..”

அவருக்கு உணவு ருசிக்கவில்லை.

“எப்பிடி ருசிக்கும்.? அதத அப்பப்ப சூட்டோட இருந்தாத்தே ருசிக்கும்..” என்று பொடிவைத்துப் பேசினார்.

மதியநேரத்துக்குப் பின் சிவனு அவரைச் சந்திக்க வந்தான். “என்னாண்ணே வந்திருந்தாளாம் ல..?..” பேச்சில் எகத்தாளம் மிகுந்திருந்தது.

அவருக்குச் சுள் ளெனக் கோபம் வந்தது. “யே பாவமப்பா.. நம்பிவந்த பொம்பள யோசிச்சுப் பாரு..! அந்தப்பிள்ள இல்லாட்டி நீ நாறிப் போயிருவ..!,- என்று அவன் தாரமில்லாது திண்டாடிய நாட்களையும், லதா அவனுக்கு தோளோடு நின்று உதவிய த்ருணங்களையும் ஞாபகப்படுத்தினார். அவர் சொல்லச் சொல்ல அவன் தலையாட்டிய விதம், ரெம்பவும் எரிச்சலை ஊட்டியது. “ நீ என்னா பெரிய இவன்னு நெனப்பா..? சீல துணியெல்லா தீ வச்சுக் கொளுத்தி இருக்க..? பெரிய கொம்பனா..? ம்..? – குரலை உச்சத்துக்கு உயர்த்தினார்.

இடுக்கியில் மாட்டிய எலியாய் சிவனுக்கு கண்ணுமுழி பிதுங்கியது. இருப்பினும் வீம்புக்குப் பேசினான். “ அதேன்.. எனக்கு அவள வேண்டாம்னு சொல்லிப் புட்டேன்ல...ணே, வேண்டாதவ உடுப்பு வீட்ல கெடக்காலாமா..?”

“அப்ப நிய்யும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்ட..?”

“ஆமாண்ணே.. அவளுக்குத்தே பெரிய்ய்ய மகெ இருக்கானல அவெங்கூடப் போய்ப் படுத்துக்கிடட்டும்..”

அவர் தன்னையறியாமலேயே அவனை அறைந்து விட்டார்.“ராஸ்கல்,எம்புட்டு எகத்தாளம்..? நாளைக்கு அந்தப் பிள்ளைக்கிச் சேரவேண்டிய காச ரெடிபண்ணி வச்சுக்க.. இல்ல.. க்காள்ளி மகளிர் ஸ்டேசன்ல போட்டு மாட்டி விட்ருவன்..”

இரவெல்லாம் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

“எதுக்கு இப்பிடி ஊர்ப்பிரச்சனயெல்லா வாங்கி ஒறங்காமக் கெடக்கனும்..” மனைவி நெஞ்சை நீவிவிட்டாள்.

வாழ்க்கைன்னா என்னா என்று புரியவேயில்லை. ஒருத்தனுக்கு ஒருத்திங்கிறாங்கெ..! அப்பிடித்தான ஆரம்பிக்கிது, ஏன் ரெண்டா மூனா தொடுத்துக்கிட்டே போகுது...? எந்த எடத்துல எந்தக் கண்ணில பிசகு உண்டாகுது..? ஏன் அதப் புரிஞ்சிக்காம தறிகெட்டு அலையிறாங்க..! கடவுளே படச்சவன் எல்லாத்தியும் ஒழுக்கமாப் படைக்கப்படாதா அதில என்னா அவசரம்.. சிவனுவையும் லதாவையும் பிரிச்சிட்டாச் சரியா.கி விடுமா.? பிரிக்கறது சரியா..? பஞ்சாயத்துப் பண்ண யார்யாரை துணைக்குச் சேக்க..! பலவாறான கணாக்குகளில் அலைபாய்ந்து அதிகாலையில்தான் உறக்கம் வந்தது.

ஆறுமணிக்கே வந்து மனைவி எழுப்பினார். கண்ணைத் திறந்தவருக்குத் தீயாய் எரிச்சல். விடிவிளக்குகூட இன்னமும் அணைக்கப்படவில்லை.

“இந்நேரத்தில என்னா..?”

“நானா எழுப்புனே.. அந்தக் கடெங்காரி வந்திருக்கா..!” – கடுப்பாய்ச் சொன்னார்.

“ஆரு லதாவா...? சட்க் கென எழுந்தார். தலைகிரெனச் சுற்றியது. ‘ராத்திரி எதும் தகராறா.. பேசாம போலீஸ் ஸ்டேசனுக்குப் போயிற வேண்டியதுதே.. நாமலாச்சும் டென்சனில்லாம வேலயப் பாக்கலாம்..’

சிவந்த கண்களுடன் வெளியில் வந்தார்.

“அண்ணே.. ராத்திரியெல்லா ரத்தரத்தமா வாந்தி எடுத்துக் கெடந்தாப்லயாம்..ணே “

’தண்ணி’ ஓவராப் போட்டால் இப்படித்தான். கிடப்பானாம். நிறையச் சொல்லி இருக்கிறாள்.

“ஒனக்கு ஆர் சொன்னா..? “

“வீட்டுக்கார அம்மா...ண்ணே..!”

’’கெடக்கட்டும். பட்டாத்தே தெரியும்..!’’

” சித்த , ஆஸ்பத்திரிவரைக்கும் வாங்கண்ணே..!”

“எதுக்கு..?”

“டாக்டர் வராம ஊசிபோட மாட்டம்னு நர்சுப் பிள்ளைக அடம்பிடிக்கிதுக..!”

கையைப் பிசைந்து கொண்டு நின்றாள் லதா.

அவ்ரது மனைவியோ அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அது, எது மாதிரி என அவருக்கு விளங்கவில்லை.

--------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக