ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

காற்றில் உரையாடல்

எதிர்புறம் திரும்பி கண்களைத் துடைத்துக் கொண்டான் முத்தையா.

”குடிகாரப்பயகூட என்னா லவவுண்டீ...? “ – அரிசிகழுவிய தண்ணீரை சாக்கடையில் ஊற்றவந்த அமுதா , வாசலோரமாய் உட்கார்ந்திருந்த கணேசனை முழங்காலால் முதுகில் இடித்து அவனை வீட்டுக்குள் வருமாறு சாடையாய் அழைத்தாள்.

முத்தையா மிதமான போதையில்தான் இருந்தான். பஸ்-ஸ்டாண்ட்டுக் கடை டீ மாஸ்டர். காலைசிப்ட் டாக இருந்தாலுஞ்சரி , மதிய சிப்ட்டாக இருந்தாலும் சரி, முத்தையா டீ பட்டறையில் ஏறுகிறபோது, அடுப்பில் புதுப்பாலும் ஏறவேண்டும். அதேபோல, அவனது சிப்ட்டில் குறைந்தது மூணு அல்லது நாலு பால் சட்டியாவது மாற்ற வேண்டும். ஒருஅளவுக்குமேல் பாலைக் காயவிடவும் மாட்டான். ஏவாரத்தின் போக்குகண்டு முக்கால்சட்டி முழுசட்டி என பாலை நிரப்பச் சொல்லுவான். பால் காய்ந்ததும் அதில் முதல் டீ தனக்குப் போட்டுக் குடித்து பாலின் திடம் சோதித்துக் கொள்வான். அதற்குத்தகுந்தாற் போல டிக்காசன் ஏற்றுவது இறக்குவதை முடிவு செய்யத் தோதுவாக இருக்குமாம். .

இதற்காகவே அவனுக்கு ஒரு ரசிகர் கூட்டம் அமைந்து போனது. “ பட்றைல ஆள் யார் இருக்கா..” ? – என கெட்ட்குமளவுக்கு தொழிலில் நேர்த்தியினை ஏற்படுத்திக் கொண்டான்.

அதைத்தவிர வேறுவேலை எதையும் முத்தையா கற்றுக் கொள்ள வில்லை. வடை போடவோ, ஸ்வீட் – காரவகைகள் செய்யவோ பழகவும் இல்லை. சமையலும் தெரியாது. அடுப்பில் தோசைசட்டி வைத்து ஆம்லட் கூட போட்டதில்லை.

”ஒருவேலயப் பழகுனாப் போதும். அதுல உருப்படியா நிண்டாலெ ஏகதேசம்.... எல்லாவேலயயும் ஒராளே செய்யணுமின்னு எதும் வேண்டுதலா..? இல்ல ஊர்லதே ஆள் பத்தாக் கொறயா..? ஆளுக்கொண்ணா செஞ்சு பொழச்சுட்டுப் போறாங்க.. என்னைக்கிமே பலவட்றப் பொழப்பு கூடாது.. வேஸ்ட்டு... வெளங்காது..! “

ஒருத்தரைப் போல முத்தையா அடிக்கடி கடை மாறுவதும் கிடையாது. பொதுவாக டீ மாஸ்டர்கள் யாரும் ஒரேகடையில் ரெம்பநாள் நீடிப்பதும் கிடையாது. மூணுமாசம் அல்லது ஆறுமாசம் அதிகமாகப் போனால் அந்தவருசத்து தீபாவளி போனஸ் வாங்கிக்கொண்டு அடுத்தகடைக்குத் தாவிவிடுவார்கள். முத்தையா மட்டுமே ஏழெட்டு வருசமாய் ‘ பஸ்டாண்ட்டு கட மாஸ்டர் ‘ என்கிற சிறப்புப் பெயரோடு வேலைபார்ப்பவன்.

முத்தையாவுக்கு ஏனோ வீடும் பொண்ட்டாட்டியும் மட்டுமே சரியாக வாய்க்கவில்லை. கண்க்குக்கு நாலுபேரோடு வாழ்ந்துவிட்டான். இரண்டு பெண்களுக்கு தாலிகட்டியும் குடித்தனம் செய்தான். யாரும் இரண்டு வருசத்துக்குமேல் அவனோடு சேர்ந்து வாழ்ந்திடவில்லை.

” நல்லா ஓசிக்கும்போது பேசாம ஒருமொழக் கயத்த வாங்கி விட்டத்துல தொங்கீறலாமான்னு கூட தோணுது.. நா இருந்து ஆருக்குப் புண்ணியம்..! “

கணேசனின் வீட்டுக்கு எதிர்புறமிருந்த சாக்கடைமேல் அமைந்திருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்தான் முத்தையா. சுள்ளென்ற மதியம் கடந்த பொழுது. வேலைக்காரர்கள் சாப்பாட்டுப் பிறகான பாடுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அமுதா அரிசியைக் கழுவி ஆட்டுரலில் போட்டு மின் உரலை ஓடவிட்டாள்.

முத்தையா உட்கார்ந்திருந்த சாக்கடைக்குக் கீழ் ஒரு கோழி தன் குஞ்சுப் படைகளோடு இரைபொறுக்கிக் கொண்டிருந்தது. அந்த தாய்க் கோழியை கண்வைத்து கருஞ்சேவல் ஒன்று அதனைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தது.

” என்னாவாம்.. மாஸ்டரு இங்கன கடயப் போட்டுட்டாரு.. ? “ அவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்த கசாப்புக் கடை பாய் மெனக்கிட்டு நின்று விசாரிக்கலானார்.

” மாஸ்டருக்கு கவல வந்திருச்சு பாய்... “ – கணேசன் அவருக்கு பதில் சொன்னான்.

” அதுக்குத்தே மருந்து வச்சிருப்பாருல்ல.. “

முத்தையாவின் டீ ரசனை எத்தனை பிரசித்தமோ அதைப்போல அவனது குடிப் பழக்கமும் ஊருக்குள் நல்ல பிரபலம்.

” அதச் சாப்பிட்டாத்தே கவலயே கூடுதல் ஆகுதாம் பாய்..! – கணேசன் இன்னமும் கூடுதலாய் கிண்டல் அடித்தான்.

” ஒருசைத்தான மறக்க இன்னொரு சைத்தான ஏத்திக்க வேண்டியிருக்கு “ – பாய் குல்லாயைத் தாவியபடி நிதானமாய்ப் பேசினார்.

” வாழ்க்கையே சைத்தான் தான மாமூ... ஹராம்.. ! “ – தலையினை ஸ்டைலாக உயர்த்திப் பதில் சொன்னான் முத்தையா.

” அல்லா.. மாஸ்டருக்கு ஹராமெல்லா தெரிஞ்சிருக்கே..? அப்பறமா என்னத்திக்கி இந்த சைத்தான தொங்கிக்கிட்டிருக்கீங்க மாஸ்டர்.. ! “

” வீட்டுப் பெரச்சன மாமூ.... விடியாத பெரச்சன... “

” வீடு பெரச்சனியா ? மாஸ்டருக்கு வீட்ல பெரச்சனியா..? “ சட்டமாய் நின்று கை கட்டிக் கொண்டு கேட்டார் கறிக்கடை பாய்.

” வீட்ல ஆரிருக்கா மாமூ.., ஆருமில்ல..! கஞ்சிகாச்சி ஊத்த ஆத்தா ஒண்ணு இருந்துச்சு அதும் அவுக கெளயாரப் பாக்கணூம்ணு திண்டுக்கல்லு போயிருச்சு. ஒருமாசமா வீடு கூட்டாம , வாசல் பெருக்காம வீடே துருப்பிடிச்சுப் போய்க் கெடக்கு..! “

” அதனாலதே வீட்டுக்காரவுக வீட்டக் காலி பண்ணச் சொல்றாகளாக்கும்” கசாப்புக்கடையில் பாய்க்கு வேலையில்லை போலிருக்கிறது. இத்தனை விளக்கமாய் நின்று பேசிக்கொண்டிருக்கிறாரே... என நினைத்த கணேசன், தான் உட்கார்ந்திருந்த இடத்தில் சற்று நகர்ந்து கொண்டு பாயை தன் அருகில் வந்து அமரச் சொன்னான். முத்தையாவின் பக்கம் சாக்கடை நாற்றமும் சாராய வீச்சமும் கலந்து அடிக்கிறது.

.

’ பெரியகொளம் வரைக்கும் போவணும்.. ஒக்காந்தா பொழுது ஓடிப் போயிரும்.. – என்று சொல்லிகொண்டே முத்தையா ப்க்கமாய் அமர்ந்தார்.

” நீங்களே சொல்லுங்க் மாமூ.. “ பேசுவதற்கு வாகாய் அவர்பக்கம் திரும்பி, ” நா குடிகாரந்தே... இல்லீங்கள.. , ஆர்தே குடிக்காஅ இருக்கா..? நீங்க குடிக்கறதில்லியா.. ந்தா கணேசண்ணெ குடிக்கறதில்லியா..? ஒரு பேச்சுக்குச் சொல்றே.. அல்லாரும் அள்வா குடுச்சிட்டு வருவாங்க.. நா , ஒரு கட்டிங் கூடுதலாப் போடுவே,, என்னோட வேல அப்பிடி., இடுப்பில இருந்து உள்ளஙகாலு வரையிலும் திகுதிகுன்னு ஒரே கடுப்பு. எரிச்சலு.. நாள்ப் பூராம் ஒரேஎடத்தில நிக்கிறனா, பொழுதீக்கும் தண்ணீலயே ஒழப்புறமா கொஞ்சஞ் சேத்துப் போட்டாத்தே வலி தெரியமாட்டேங்கிது..... “ – கண்களை இடுக்கியும், கைவிரல்களில் அபிநயம் பிடித்தும், இடுப்பு கணுக்காலை அளந்துகாட்டியும் தனது செயலுக்கான நியாயத்தை நீரூபித்தான்.

” ஓங்காசு.. ஒன்னோட ஒடம்பு, நீ குடிக்கிற யாரு ஒன்னய கொற சொல்லுமுடியும்...? குடிக்கிற கழுதிய வீட்ல வ்ச்சு குடிச்சா அலம்பாம வந்து சேர்வீல்ல.. ரோட்ல பஸ்சு கிஸ்சு போட்ருச்சுனா செரமந்தான....! “

” அப்பிடிப் போனாப் போகுது மாமூ, யேங் கண்ணாலான்னு கதறியழ பொண்டாட்டி இருக்காளா.. இல்ல, அப்பான்னு அடுச்சுக்கிட்டு அழுவ, புள்ளதே இருக்குதா,? எதோ ஒருபடத்துல வடிவேலு சொன்னமாதிரி, இருக்கு ஆனா இல்ல.. என்னா ஒங்களப்போல ரெண்டுபேரு வந்து மாலபோடுவீக, எனக்கு அதுபோதும்.. “ – அப்பவும் முத்தையாவின் கண்களில் கண்ணீர் மிதந்து நின்றது.

” ஏங்க , வாடிவாசல்ல ஒக்காந்துகிட்டு என்னத்த அவலச்சணமான பேச்சு..., பொணம், மாலைன்னுட்டு , எந்திரிச்சு உள்ளவாங்க.. வேலைக்குப் போக வேணாமா. “ – அமுதா நேரடியாய் அஸ்திரம் எய்தலானாள். கணேசனுக்கு எழுந்து உள்ளே செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.

”சரிங் பாய்... மாஸ்டர் ட்டப் பேசிட்ருங்க..அவர வாயக் கொஞ்சம் கொறச்சுக்கச் சொல்லுங்க.. வாய்தே அவருக்கு சத்ரு. வ்ரேன் முத்தையா..! “ வேஷ்டியைத் தட்டியபடி கணேசன் எழுந்தான். “ என்னா ண்ணே நீ வாட்டுக்கு எந்திரிச்சிட்டீக...! “ என்று முத்தையாவும் வேகமாய் எழுந்து வந்து கணேசனை மறுபடியும் அமரச்செய்தான்.

” வேலைக்கிப் போகணும் முத்தையா..! “

” என்னைய எதுக்கு ந்ணே வீட்டக்காலி பண்ணச் சொல்றாங்க..? உம்மையான காரணத்தச் சொல்லுங்க..“ – விடாபிடியாய் நின்றான்.

கணேசனுக்கு தைமசங்கடமாக இருந்தது. வாசலில் நிறுத்தி கேள்வி கேட்பது வேஷ்டியைப் பிடித்திழுத்ததுபோல் அவமானகரமாய் உணர்ந்தான். ஆனாலும் முத்தையாவைப் போல தானும் சரிக்குச்சரி பேச முடியாது. பொறுப்பாகத்தான் பதில் சொல்ல வேண்டும். தன்னுடைய வீட்டிற்குப் பின்புறமாகத்தான் முத்தையா குடியிருக்கிறான். முதலில் தாயும் மகனும்தான் அந்த வீட்டுக்குக் குடிவந்தார்கள். கொஞ்ச நாளில் முத்தையாவுக்கு அண்ணன் எனச் சொல்லி இன்னொரு குடிகாரன் வந்துசேர்ந்தான். இரண்டுபேரும் சேர்ந்து விட்டால் தெருவில் ஏக ஆர்ப்பாட்டம்தான். சந்தோசம் சிரிப்பு மட்டுமல்லாமல் அழுகை, அடித்டி எல்லாமும் நடக்கும். அவர்களது அம்மா ஏதும் செய்ய முடியாமல் வீட்டுக்கு வெளியே வந்து உட்கர்ர்ந்து விடுவார்.

அப்போதே தெருக்கார்கள் முத்தையாவை குடிவைத்தது பற்றி வீட்டுக்காரரிடம் புகார் செய்தார்கள். ‘ குடிவக்கெ வேற குடும்பமே கெடைக்கலியா... ஒங்களுக்கு ! அக்கம் பக்கத்தில யாரும் ஒறங்க முடில, பொண்டு பொடுசுக காதுகுடுத்துக் கேக்க முடியாத அசிங்க அசிங்கமான பேச்சு.. வாடக வருதுங்கறதுக்காக நீங்க இப்பிடி எனக்கென்னான்னு இருக்கக் கூடாது.’

உண்மையிலேயே அந்த வீட்டுக்கு வேறுயாரும் குடிவர யோசிப்பார்கள். அத்தனை பழையவீடு. மின்சாரத்தைத் தவிர வேறெந்த வசதியும் அதில் கிடையாது. ஆனாலும் தெருக்காரர்களின் புகாருக்காக அண்ணன்காரன் இருக்கக்கூடாது என்று கண்டிசன் போட, அவனும் போய்விட்டான். கடைசியில் முத்தையாவும் அவனது அம்மாவும் மட்டுமே இருந்தார்கள். கொஞ்ச நாளில் என்ன காரணத்தாலோ அம்மாவும் வீட்டைவிட்டுப் போய்விட்டது இப்போது வீட்டில் முத்தையா தனி ஆள். வர, படுக்க, போகவுமாய் இருந்திருக்கிறான். இதில் கடந்த சில நாட்களாய் இரவுநேரத்தில் வாசலில் உட்கார்ந்து கொண்டு காற்றோடு ’யுத்தம்’ நடத்தியிருக்கிறான். மறுபடி தெருவாசிகள் திரண்டுவிட்டனர். வீட்டுக்காரர் வீட்டைப் பூட்டிவிட்டார்.

” என்னா ண்ணே வீடு, பொல்லாதவீடு. ஆராச்சும் உள்ளாற வந்து பாத்தாதெரியும்ணே.. மேல லாகடமெல்லா ஒரேகீற்ல்.. பாலம்பாலமா நிக்கிது சாப்பிடுறப்ப, அசந்து தூங்குறப்ப ‘சப்பான்காரன்’ குண்டு போட்டமாதிரி ‘டொம்மு டொம்முன்னு’ கார பேந்து விழுகுது. அதுக்குப் பயந்தே எங்கம்மா ஊருக்கு ஓடிப் போயிருச்சு. மழ பெஞ்சா, டி.வி. பொட்டிய வச்சு மறச்சுத்தே ஒக்காந்துக்கணும். வீடுபூராம் அம்புட்டு ஒழுக்கல். இதுக்கும் மேல பெருச்சாளிக..! எந்தப் பண்டமும் வாங்கி வக்கெமுடியல.. எதவச்சாலும் தூக்கீட்டுப் போயிருது. ஒண்ணூமே சிக்கலன்னா ஒற்ங்குறப்ப காலச்சொரண்டி சொரண்டி புண்ணா ஆக்கிப்புடுது. இத்ல தண்ணியடிக்காம எப்பிடிண்ணே ஒறங்க முடியும்...? சொல்லுங்க..! இப்பேர்ப்பட்ட அரமணைக்கி அறநூறுரூவா வாடக, அஞ்சாயிரம் அட்டுவான்சு. நாள்ப் பூராம் எச்சிக் கெளாஸ் கழுவி சம்பாதிச்சு மாசாமாசம் பில்லு கட்ன மாதிரி வாடகய கட்டீட்டு வரேண்ணே.. “.

” ங்கபாரூ.. அந்தப் பேச்செல்லா ஒனக்கு வீடுவிட்டவ்க கிட்டத்தேம் பேசிக்கணும்.. இவருகிட்ட என்னாத்துக்கு ஒப்பிக்கிற..? இவரு என்னா ஐக்கோர்ட்டு ஜட்ஜா..! ஒனக்கு தீர்ப்புச் சொல்ல..? ந்தா, எந்திர்ச்சு உள்ளாற வர்ரீகளா இல்லியா.. வேலயத்தெவெங்கிட்ட வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு புடிக்கலன்னா வீட்டக் காலிபண்ணீட்டுப் போவமாட்டாம, நடுவீதில நின்னு நாயங்கேக்க வந்துட்டாக .... பெரிய்ய்ய அரிசந்திர மகாராசா... “ – வெளியில் வந்த அமுதாவின் இரைச்சலில் கணேசன் வீட்டுக்குள் போகவேண்டி வந்தது.

அதன்பிறகும் ரெம்பநேரம் முத்தையா, கறிக்கடை பாயிடம் எதேதோ ஒப்பித்துக் கொண்டிருந்தான். அன்னஞ்சியில் தன்குடும்பம் கோடீஸ்வரனாய் வாழ்ந்தது, முத்தையாவின் தாயார் ஏதோ ஒரு பள்ளியில் டீச்சராய் வேலை பார்த்தது, தந்தையாரின் பிடிவாதத்தால் தாயார் டீச்சர் வேலையினை உதறிவிட்டது, ஊரில் இருந்த ஆஸ்தி பாஸ்தியெல்லம் தந்தையின் வறட்டு கௌரவத்தினால் தொலைத்தது, கடைசியில் இன்றைக்கு ஒண்டிப்படுக்க ஒரு குடிசையில்லாமல் முத்தையா ஊரெல்லாம் லோல்பட்டுத் திரிவதாகவும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான். அவர்கள் கலைந்து போகும்வரை கணேசன் வீட்டைவிட்டு வெளியில் தலைகாட்டவே இல்லை.

மாலையில் பஸ்-ஸ்டாண்டின் புதிய திடலில் ஏதோ ஒருபொதுக்கூட்டம் நடந்த் கொண்டிருந்தது. வாகனப்போக்குவர்த்துக்கு இடையூறு இல்லாமல் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.

கணேசன் வழக்கம் போல, டீக்கடையின் பக்கவாட்டுச் சுவரில் சாய்ந்து நின்றபடி அந்த சொற்பொழிவினைக் கேட்டுக் கொண்டிருந்தான். கையில் திறவையான மிக்சர் பொட்டலம். பேச்சாளர், முல்லைப் பெரியாற்றின் வரலாற்றை உணர்ச்சி பொங்க உரைத்துக் கொண்டிருந்தார்.

ண்ணேய்.. இதென்னா இப்பிடி கொடசாஞ்சுட்டு நிக்கிறீக... ஒரு காரியத்துக்கு வந்தம்னா.. முன்னால நின்டு சட்டமா ஒக்காந்துகிட்டுக் கேக்கணும் ணே.. அப்பத்தான் அவுகளுக்கும் சந்தோசம். நமக்கும் புரயோசனம்...! “

சிலீரென்ற குரலில் பேச்சொலி கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினான் கணேசன். அருவியில் குளித்து வந்தவனைப் போல பளபளப்பாய் நின்றிருந்தான் முத்தையா.. துவைத்துத் தேய்த்த உடுப்பு, நெற்றியில் நீளமான திருநீற்றுப்பட்டை, அதன் நடுவே அகலமான சந்தனமும் செஞ்சாந்து அடுக்கிய வட்டமான பொட்டு ; சவ்வாது வாசனை.

” சினிமா கொட்டாய்க்குப் போனம்னா, சீட்டியடிச்சுக்கிட்டுப் படம் பாக்கணும், காருல போனா கண்ணுமுழுச்சு வேடிக்க பாத்துட்டே போணும்.. அதுபோல மிச்சரத் தின்னம்னா அதுல இருக்க சேர்மானத்த கடிச்சு சொவச்சு உள்ளாற எறக்கணும். நீங்க என்னமோ எதிலியுஞ் சேராமல்ல நின்னுட்ருக்கீக..” தொடர்ச்சியாகப் பேசிய முத்தையவின் மீது கணேசன் குரோதப் பார்வையை வீசினான்.

” ந்தா ஒனக்கு மிச்சர் வேணுமா.. நேராக் கேளு. ஓங்கடச் சரக்குதே.. நானே காஸ்குடுத்து வாங்கித்தாரே.. எங்கன பாத்தாலும் நிம்மதியாவே நிக்கவிட மாட்டேங்கிற..” எரிந்து விழுந்தான்.

” உள்ளதச் சொன்னே ந்ணே.. என்னிய விடுங்க நா வழிப்போக்க்ல வந்தே. நீங்க பொதுக்கூட்டத்தக் கேக்கணுனே வந்து நிக்கிறீக.. அதேஞ் சொன்னே செவத்த அண்டக்குடுத்து நிக்கவேண்டாமேனு.. “

கணேசன் அவனை கையெடுத்துக் கும்பிட்டான். “ ரோட்ல ஆயிரம் நடக்கும், ஓம்பெரச்சனய என்னான்னு பாத்தியா... வீட்டப் பூட்னதும் நூறுபேர் வந்து வீட்ட கேட்டுட்டுப் போயிட்டாக தெரியுமா..? இங்கன வந்து வெட்டித்தனமாப் பேசறத விட்டு, வீட்டுக்காரரப் பாத்து சாவிய வாங்கப் பாரு” - என்றான்.

உடனே முத்தையா சட்டைப் பைக்குள் கைவிட்டு வீட்டுச் சாவியைத் தூக்கிக் காண்பித்தான். “ சாவிய வாங்கிட்டே ண்ணே. தப்ப ஒத்துக்கிட்டேன். மாசாமாசம் லேட்டில்லாம அட்டுவான்ஸ்சாவே வாடகையத் தந்திர்ரதா சொல்லீர்க்கே.. வீட்ட சுத்தபத்தமா வச்சம்னா பெருச்சாளி, பூரானெல்லா என்னாத்துக்கு ணே வரப்போகுது..? இன்னிம்மேல தண்ணியப் போட்டுட்டு தெருவுல சலம்பல் பண்ணமாட்டேன்னு சத்திய்ம் செஞ்சு குடுத்துட்டே.... ஊருக்குள்ல இம்பிட்டு கொறஞ்ச வாடகைக்கு வீடுகெடைக்கிறது அருவம் இல்லியா...ண்ணே அத நாமதான காப்பாத்திக்கணும். நல்லா புரிஞ்சிக்கிட்டே. ..ண்ணே செரி.. நா வீட்டுக்குப் போறேண்ணே. இருட்டிப் போச்சு. லைட்டப் போடணும்.. நீங்க இருந்து அமைதியா கூட்டத்தக் கேட்டுட்டு வாங்க.. “ – நிதானமாய்ப் பேசிவிட்டு மெதுவாய் நகர்ந்து போனான் முத்தையா.

-----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக